நிகழ்நிலை கசினோவை ஒழுங்குபடுத்த துரித நடவடிக்கை எடுக்கவும்

நிகழ்நிலை (ஒன்லைன்) கசினோ செயற்படுத்துவதற்கு சட்டரீதியான ஏற்பாடு ஒன்று இல்லாத நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய வருமானத்தை இல்லாமல் செய்யும் வகையில் ஒன்லைன் கசினோ செயற்படுத்தப்படுவது தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.

இது தொடர்பில் விரைவாக கவனம் செலுத்துமாறு கோரி நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (06) இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

கசினோ உள்ளிட்ட சூதாட்ட வர்த்தகங்களில் இருந்து அறவிடப்படவேண்டிய நிலுவை வரிகளை அறவிடுதல் மற்றும் இது போன்ற வர்த்தகங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பில் மிகவும் முக்கியமான ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், அதனை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின்  வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 வது பிரிவின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் கட்டளை கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதனையடுத்து அதற்கான அனுமதி குழுவினால் வழங்கப்பட்டது.

அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதியும் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கருத்திற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லன்சா, மயந்த திசாநாயக்க, சந்திம வீரக்கொடி, நாளக கொடஹேவா, கௌரவ ஹர்ஷண ராஜகருணா மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.