தென்மேற்கு நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டிருந்த பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், இரண்டு மாதங்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான ஓயோவில் (Oyo) உள்ள மூன்று பாடசாலைகளில் இருந்து இவர்கள் கடத்தப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்புப் படையினரின் இந்த வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை தனக்குப் “பேரானந்தத்தை” அளித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு (Bola Tinubu) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 15ஆம் திகதி, இரண்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் ஒரு மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 46 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டனர்.
இக்கடத்தல் சம்பவத்திற்கு ‘போகோ ஹராம்’ (Boko Haram) பயங்கரவாத அமைப்பே காரணம் என அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கடத்தப்பட்டவர்கள் 2 வயது தொடக்கம் 16 வயதுடைய மாணவர்கள் என்பதுடன் இவர்கள் கடத்தப்பட்ட சில நாட்களிலேயே ஆசிரியர் ஒருவர் ஆயுததாரிகளால் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




