பங்களாதேஷில் ஜனநாயக ஆதரவு இளைஞர் தலைவர் ஷரிஃப் ஒஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை கலவரங்கள் வெடித்துள்ளன. தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம் 12 ஆம் திகதி, முகமூடி அணிந்த சிலர் ஷரிஃப் ஒஸ்மான் ஹாடியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனர். கடுமையான துப்பாக்கிக் காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஷரிஃப் ஒஸ்மான் ஹாடியைத் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் பின்னர் வன்முறையாக மாறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷரிஃபின் மரணச் செய்தி வெளியானதையடுத்து, டாக்காவில் மூன்று இடங்களில் தீவைத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பங்களாதேஷின் முக்கியமான இரண்டு செய்தித்தாள்களின் அலுவலகங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. குறிப்பாக, டெய்லி ஸ்டார் பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊடக நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாக்காவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகம் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதாகவும், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
32 வயதான ஷரிஃப் ஒஸ்மான் ஹாடி, கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய இளைஞர் மற்றும் மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஷரிஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமை மேலும் தீவிரமடையாமல் கட்டுப்படுத்த அரச நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





