பங்களாதேஷில் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ராஜ்பாரி மாவட்டத்தில், பயணிகளுடன் படகில் ஏற முயன்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பத்மா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (26) உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

டாக்கா நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, தௌலத்டியா படகுத் துறையில் வைத்து போக்குவரத்துப் படகில் ஏற முற்பட்டுள்ளது.

இதன்போது மற்றுமொரு சிறிய படகு மோதுண்டதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 80 அடி ஆழமுள்ள ஆற்றுக்குள் தலைகீழாகக் கவிழ்ந்து மூழ்கியது.

மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 11 பெண்கள், 05 சிறுவர்கள் மற்றும் 08 ஆண்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் ‘ஹம்சா’ என்ற மீட்புக் கப்பலின் உதவியுடன் பேருந்து ஆற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழை மற்றும் கடும் நீரோட்டம் காரணமாக மீட்புப் பணிகள் நேற்றிரவு சவாலாக அமைந்துள்ளன.

விபத்து நிகழ்ந்த தருணத்தில் பேருந்துக்குள் சுமார் 40 முதல் 50 பயணிகள் இருந்ததாக அஞ்சப்படுகிறது.

பேருந்து மூழ்குவதற்கு முன்னர் சுமார் 11 பயணிகள் ஜன்னல் வழியாகக் குதித்து நீந்தித் தப்பியுள்ளனர்.

எஞ்சியவர்கள் பேருந்துக்குள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுவதால், இன்றும் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.