பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒற்றுமை நாளை ஒட்டி பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நிற்பதாகக் கூறிய இந்தியப் பிரதிநிதி, இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியா எப்போதுமே ’இரு நாடுகள்’ தீர்வை முன்வைத்து வருகிறது என்றார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ருச்சிரா காம்போஜ், ” இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உரிய நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய இந்தப் போர் நிறுத்தம் உதவும்.
இந்தியா இதுவரை 70 டன் அளவிலான மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண உதவிகளையும் 16.5 டன் மதிப்பிலான மருந்துகளையும் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ளது.
இந்தப் போருக்கு வித்திட்டது அக்டோபர் 7ல் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் தான் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பயங்கரவாதம், பிணைக் கைதிகளாக அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்துச் செல்லுதல் போன்ற செயல்களை எதைக் கொண்டும் நியாயப்படுத்த இயலாது. ஹமாஸ் குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் எந்தவித நிபந்தனையுமின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இவ்விவகாரத்தில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். போர் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படக் கூடாது, அமைதியும், ஸ்திரத்தன்மையும் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதுவும் பேச்சுவார்த்தை மூலம் ’இரு நாடு தீர்வை’ நோக்கி நகருமாறு இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு வலியுறுத்தி வருகிறது. இரு நாடு தீர்வு மட்டுமே சுதந்திரமான, இறையான்மை பொருந்திய பிராந்தியத்தை உருவாக்கும். வரையறுக்கப்பட்ட எல்லைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்.
இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்துடன் இருநாட்டு நல்லுறவைப் பேணும். சுகாதாரம், கல்வி, பெண்கள் அதிகாரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் இணைந்திருக்கும். இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்சினைக்கு அமைதியின் வழியில் நிரந்தரத் தீர்வு என்பதே இலக்கு” என்றார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் காசாவில் இதுவரை 15000க்கும் அதிகாமானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பிலும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போது தற்காலிகப் போர் நிறுத்தம் 5வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்தப் போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட்ட கத்தார், எகிப்து நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. அமெரிக்காவும் இஸ்ரேல் – ஹமாஸ் ‘இரு நாட்டு’ தீர்வை நோக்கி நகர வேண்டும் என்றும் அதற்கும் அமெரிக்கா துணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,