பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தாக்குதல்

பாகிஸ்தானின் துர்பத்தில் அந்நாட்டின் 2-வது பெரிய கடற்படை, விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர்.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் மஜீத் ராணுவப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் கூறும்போது, விமானப்படை தளத்துக்குள் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியானதாக தெரிவித்துள்ளது.இந்த விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்களை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது.

சீன முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வரும் அந்த இயக்கம் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் குவாதர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.