போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு

ஈ​ரான் மீது 5 நாட்​கள் தாக்​குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்​களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடை​பெற்று வரு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது.

இந்த போரின் எதிர்​விளை​வாக ஹார்​முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முடக்கி உள்​ளது. இதனால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யுவுக்கு தட்​டுப்​பாடு ஏற்பட்டிருக்கிறது.

ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் திறக்க வேண்​டுமென ட்ரம்ப் விடுத்த எச்​சரிக்​கைக்கு பதிலடி​யாக வளை​குடா நாடு​களின் கடல்​நீர் சுத்​தி​கரிப்பு நிலையங்களை தகர்ப்​போம் என்று ஈரான் தரப்​பில் எச்​சரிக்கை விடுத்​தனர்.

வளை​குடா நாடு​களின் குடிநீர் தேவை​யில் 90% கடல்​நீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் மூல​மாக மட்​டுமே பூர்த்தி செய்யப்படு​கிறது. அவற்றை ஏவு​கணை​கள் மூலம் தகர்ப்போம் என்று ஈரான் பகிரங்​க​மாக எச்​சரிக்கை விடுத்​தது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த இரு நாட்​களாக அமெரிக்​கா, ஈரான் இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்த பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக அமைந்திருக்கிறது.

மத்​திய கிழக்​கின் பிரச்​சினை​களுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வருகிறோம். ஒரு வாரம் வரை பேச்​சு​வார்த்தை நீடிக்கக்கூடும். எனவே ஈரானின் மின் நிலை​யங்​கள், எரிசக்தி நிலை​யங்​கள் மீது 5 நாட்​கள் தாக்​குதல் நடத்தப்படாது. இதுதொடர்​பாக அமெரிக்க படைகளுக்கு உத்​தரவு பிறப்​பித்து உள்​ளேன். இவ்​வாறு அவர் தெரிவித்துள்​ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை அதிபர் ட்ரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் பிரதிநிதிகளை நான் தொடர்பு கொள்ளவில்லை. அவர்களே பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண அவர்கள் விரும்புகின்றனர். நாங்களும் சுமுக தீர்வை எட்ட விரும்புகிறோம்.

ஈரானை சேர்ந்த சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் மரியாதைமிக்க தலைவர்கள். ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தியை நானும், காமேனிக்கு அடுத்த தலைவரும் இணைந்து நிர்வகிக்கலாம். ஈரானுடனான பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்றால் ஒரு வாரத்துக்குள் போர் முடிவுக்கு வரும். இல்லையெனில் ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிவோம். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.