மணிப்பூர் வன்கொடுமை | இளம் பெண்களை மானபங்கம் செய்த வழக்கில் 5வது நபர் கைது

மணிப்பூரின் காங்போக்பியில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று மானபங்கம் செய்யும் வீடியோ ஒன்று கடந்த புதன்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 5வது நபர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான நபர் யும்லெம்பாம் நுங்சிதோய் மைத்தேயி என்று அடையாளம் தெரியவந்துள்ளது. 19 வயதான அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் இதுவரை கைதானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கைதான 4 பேரும் 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மணிப்பூரில் மே 4 ஆம் தேதி மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மே 6 ஆம் தேதியன்று 45 வயதான பெண் ஒருவர் ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கருகிய நிலையில் அப்பெண்ணின் சடலம் கிடப்பதும் அதில் பதிவாகியுள்ளது. தலைநகர் இம்பாலில் கடந்த மே 6 ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

மே 4-ல் நடந்தது என்ன? மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரத்தை நிகழ்த்துவதற்கு முன்பு காங்போக்பி மாவட்டத்திலுள்ள அந்தக் கிராமத்துக்கு வந்த அந்த ஆயுதமேந்திய கும்பல், வீடுகளை கொள்ளையடித்து, தீ வைத்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, பலரைக் கொலை செய்தது என்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அதில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதைத் தடுக்க முயன்ற அவருடைய அண்ணனை அந்தக் கும்பல் அடித்துக் கொன்றதாகவும் அந்த எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் வேதனை: இதனிடையே, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரது கணவர் கார்கில் போரில் போராடிய ராணுவ வீரர். உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “நான் கார்கில் போரில் போராடியவன். அதேபோல் இலங்கைச் சென்ற இந்திய அமைதிக் குழுவில் இருந்திருக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால் என் மனைவியையும், என் சக கிராமத்தினரையும் காப்பாற்ற முடியவில்லையே” என்று வேதனையாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்