உத்தர பிரதேச மாநில ஃபதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஹர்திக் வர்மா (32).ஹர்திக், பணியின் காரணமாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
அவருக்கு தன்னுடன் பணியாற்றும் கேப்ரியலா ட்யூடா (21) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.ஹர்திக் இந்து மதத்தை சேர்ந்தவர்; கேப்ரியலா கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம், ஹர்திக் தன்னுடன் கேப்ரியலாவை அழைத்து கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு வந்தார்.
அங்கு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், இருவரையும் வரவேற்றனர். கேப்ரியலாவுடன் நெருங்கி பழகிய ஹர்திக்கின் குடும்பத்தினர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அக்குடும்பத்தினருடன் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் பங்கேற்று மகிழ்ச்சியுடன் தம்பதிகளை வாழ்த்தினர்.ஃபதேஹ்பூரில் உள்ள பூர்வீக வீட்டிலிருந்து குஜராத் மாநில காந்தி நகருக்கு தம்பதியினர் செல்ல உள்ளனர். அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
அதில் கேப்ரியலாவின் தந்தை மேசின் ட்யூடா, தாய் பார்பரா ட்யூடா மற்றும் மணப்பெண்ணின் உறவினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இதை தொடர்ந்து ஹர்திக்-கேப்ரியலா தம்பதியினர் நெதர்லாந்து செல்கிறார்கள். அங்கு கிறித்துவ சம்பிரதாய முறைப்படி மீண்டும் அவர்களுக்கு திருமணம் நடைபெறும்.பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களுடன் நாடுகளையும், மதங்களையும் தாண்டி இணைந்த மனங்களை சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.