மேகாலயா வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்திய ஜனாதிபதி இரங்கல்

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலைப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்தாக செய்தி வெளியானதை அறிந்து வேதனையடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் எனும் இடத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று (5)  மாலை இடம்பெற்ற வெடிப்பு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்துக்குரிய வகையிலான குறித்த சுரங்கப் பகுதியில் தொழிலாளர்கள் பலர் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டு பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

நுழைவுப் பகுதியில் பாறைகள் விழுந்து மூடியதால் அதனுள் சிக்கியிருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அரசு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோருக்கு 2 இலட்சம் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது