மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பின்னடைவு

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜகவின் சுவெந்து அதிகாரி முன்னிலையில் உள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுவெந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியிலும் தனது செல்வாக்கைத் தக்கவைத்து முன்னிலையில் இருந்து வருகிறார். மேற்கு வங்காளத்தின் முக்கிய தொழில்துறை மற்றும் நகர்ப்புற மண்டலங்களில் பாஜக அதிக அளவிலான தொகுதிகளைக் கைப்பற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நிலவிய அதிருப்தி, பாஜகவிற்குச் சாதகமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மம்தா பானர்ஜியின் முன்னாள் நம்பிக்கைக்குரியவராக இருந்து பாஜகவிற்கு மாறிய சுவெந்து அதிகாரி, மம்தாவுக்கு நேரடிப் போட்டியாக உருவெடுத்துள்ளது திரிணாமுல் காங்கிரஸிற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

காலை 11 மணி மற்றும் மதிய நிலவரப்படி, மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாலைக்குள் அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் என மூன்று மாநிலங்களிலும் இன்று ஒரே நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.