ரஷியாவில் இசை நிகழ்ச்சி தாக்குதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பயங்கரவாதிகள்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் மிகப்பெரிய இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு சென்றிருந்த 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 152-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற டாலர்சோன் மிர்சோயேவ் (வயது 32), சைதாக்ரமி (30), சம்சுதீன் பரிதுனி (25) மற்றும் முகமது சோபிர் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் இருவர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த 4 பேரையும் வருகிற மே மாதம் 22-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.