ரியாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்திற்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, சிறிய அளவிலான தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இரண்டு முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனவும் சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள தூதரகத்தின் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டு, ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதால், சுமார் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தங்களது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் இந்த அசாதாரண சூழலால் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.




