விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

விண்வெளி பயணங்களில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள் (space debris) பிரச்சினையை தீர்க்க, ஜேர்மனியின் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் லியோனிடாஸ் அஸ்கியானாகிஸ் (Leonidas Askianakis) புதிய ஸ்டார்ட்அப் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அஸ்கியானாகிஸ் நிறுவிய Project-S நிறுவனம், பூமியைச் சுற்றி உள்ள 1 செ.மீ முதல் 10 செ.மீ அளவுள்ள சிறிய துண்டுகளை கண்டறிய உயர் உணர்திறன் கொண்ட ரேடார் மற்றும் தனித்துவமான அல்காரிதம் பயன்படுத்தும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

பின்னர், பெரிய துண்டுகளை அகற்ற ரோபோடிக் probe-களும் அனுப்பப்பட உள்ளன.ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (ESA) மதிப்பீட்டின்படி, தற்போது பூமியைச் சுற்றி 12 லட்சம் குப்பை பொருட்கள் உள்ளன. 1 செ.மீ அளவுள்ள ஒரு துண்டு கூட செயற்கைக்கோளை அழிக்கும் சக்தி கொண்டது.

சமீபத்தில், சீன விண்வெளி குழுவின் capsule, விண்வெளி குப்பை காரணமாக தாமதமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த திட்டத்திற்கு, பவேரியா மாநில அரசு 1 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும், அமெரிக்க முதலீட்டாளர்களும் பங்கெடுத்துள்ளனர்.

பவேரியா, விண்வெளித் துறையில் 245 மில்லியன் யூரோ முதலீடு செய்து, ESA ஒப்பந்தங்களில் 2.9 பில்லியன் யூரோ பெறும் நிலையில் உள்ளது.

தனது ஸ்டார்ட்அப் குறித்து அஸ்கியானாகிஸ் கூறியதாவது: “200 ஆண்டுகளாக விண்வெளியில் குப்பைகள் இருந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை அகற்ற முயலவில்லை. அதனால், நான் இந்த முயற்சியை தொடங்கினேன்” என தெரிவித்துள்ளார்.

Project-S தனது முதல் விண்வெளி பயணத்தை 2026-ல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது, விண்வெளி பாதுகாப்பில் ஜேர்மனியை முன்னணியில் நிறுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.