ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் உள்ள லொஸ் காஸார்டோஸ் பகுதியில் பரவி வரும் கடும் காட்டுத்தீயினால் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்தலூசிய பிராந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிலர், தீப்பிழம்புகளுக்குள் சிக்கி முழுமையாக எரிந்துபோன வாகனங்களுக்குள்ளேயே சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கத்தில் 6 மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்தலூசிய பிராந்திய அரசாங்கம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறுந்து விழுந்த மின்சாரக் கம்பி ஒன்றின் காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மிக வேகமாகப் பரவியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், தீ விபத்துக்கான துல்லியமான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட ‘பெடார்’ என்ற சிறிய கிராமப் பகுதியில் சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒருவர் புகை மூட்டத்தினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவும், மற்றொருவர் தீக்காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நால்வருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பயங்கர தீ பரவல் காரணமாகப் பல பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், சுமார் 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.




