அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்று வரும் காஸா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தரப்பு சார்பில் கலந்துகொள்ளும் முக்கிய பேச்சாளர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் அஸ்ஸாம் அல்-ஹய்யா, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அஸ்ஸாம், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரி பாசிம் நயிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் தங்கியிருந்து ஹமாஸின் காஸாபிரிவை வழிநடத்தி வரும் கலீல் அல்-ஹய்யா, இஸ்ரேலியத் தாக்குதலில் தனது மகனை இழப்பது இது நான்காவது முறையாகும்.
2008 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு மகன்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு டோஹாவில் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு மகன் கொல்லப்பட்டார்.
கலீல் அல்-ஹய்யாவைக் கொல்ல இஸ்ரேல் பலமுறை முயற்சி செய்துள்ள போதிலும், அவர் ஒவ்வொரு முறையும் உயிர் தப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனது மகனின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக ‘அல் ஜசீரா’ ஊடகத்திற்குப் பேட்டியளித்த கலீல் அல்-ஹய்யா, “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை சீர்குலைக்கவே இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட விதிகளைப் பின்பற்ற இஸ்ரேல் விரும்பவில்லை என்பதை இந்தத் தாக்குதல்கள் தெளிவாகக் காட்டுகின்றன,” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்களுக்கு இடையே ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேற வேண்டும், காஸாவின் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட வேண்டும்., ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பன ட்ரம்பின் திட்டம் ஆகும்.
எனினும், ஹமாஸின் ஆயுதங்களைக் களைவது குறித்த நிபந்தனையே தற்போது பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. முதல் கட்ட நிபந்தனையான ‘முழுமையான தாக்குதல் நிறுத்தம்’ மற்றும் ‘படைகள் வெளியேற்றம்’ ஆகியவற்றை இஸ்ரேல் முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என ஹமாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.



