3-ம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகள் கல்வி கற்க தலிபான் தடை?

ஆப்கானிஸ்தான் நாட்டில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அறிவிப்புக்கு மாறாக அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது.

இந்த சூழலில் தலிபான் அரசின் கல்வித் துறை, 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதி இல்லை என சில மாகாணங்களில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் பயிற்சிக் கூடங்களின் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளதாம். 10 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பவும் அவர்களுக்கு தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. தங்களை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என அந்த நாட்டில் ஆறாம் வகுப்பு வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல தடை உள்ளது. பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் பெண்கள் பூங்கா, ஜிம், அழகு நிலையங்கள், காட்சிக் கூடங்கள் செல்ல தலிபான் தடை விதித்துள்ளது.