45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!

யமுனை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஏற்கனவே யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடும் மழையின் காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளப் பெருக்கினால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ் மகாலின் சுற்றுச் சுவரை தொட்டுள்ளது. ஏற்கனவே 45 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்ற மழை வெள்ளத்தினால் தாஜ் மகாலின் சுற்றுச் சுவரை தண்ணீர் சூழ்ந்தது.

யமுனை நதியின் நீர்மட்டம் 497.9 அடி உயர்ந்துள்ளது. குறைந்த அபாய அளவான 495 அடியை இது கடந்து தற்போது 497.9 அடி உயர்ந்துள்ளது. இதிமாத்-உத்- தௌலா கல்லறையின் வெளிப்புறச் சுற்றுச் சுவரை தற்போது தண்ணீர் தொட்டுள்ளது. மேலும் ராம்பக், மெஹ்தாப் பக், சொகராபக், காலா கும்பட் ஆகிய பகுதிகள் அபாயத்தில் உள்ளதாகவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வரை எந்த சேதமும் இல்லை எனவும் இன்னும் தாஜ்மகாலின் அடிப்பாகத்தை தண்ணீர் தொடவில்லை எனவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாஜ்மகாலின் தொல்லியல்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது “ தாஜ்மகாலின் கட்டுமானம் எவ்வளவு பெரிய வெள்ளம்  ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக தாஜ்மகாலின் பின்பக்க சுவரை வெள்ளம் தொட்டது 1978ல் தான்.

1978 ஆம் ஆண்டில், யமுனை ஆற்றின்  நீர்மட்டம் 508 அடியாக அதிகரித்தது. இதுதான் அதிகபட்ச அளவாக பார்க்கப்பட்டது.  தாஜ்மஹாலின் பாசாய் காட் புர்ஜின் வடக்குச் சுவரை நீர் தொட்டது. அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 22 அறைகளுக்குள் தண்ணீர் புகுந்து, சேறும் சகதியுமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.