பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் உத்தேச சட்டத்திற்கு மேலும் சில தரப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு இந்த சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த உத்தேச சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டமானது நிறைவேற்று அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக அறிமுகம் செய்யப்படும் அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கோரியுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை விஸ்தரித்தல், கருத்துச் சுதந்திரத்தை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசமான விளைவுகள் இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் சிவில் சமூக செயற்பாடுகள், சட்ட ரீதயிாக ஒன்றுகூடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முடக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை பாதுகாப்பு செயலாளரின் உத்தரவில் நீண்ட கால ம் தடுத்து வைக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் சமூக செயற்பாடுகளையும் முடக்கும் விதமான சட்ட ஏற்பாடுகள் பொருத்தமுடையதல்ல என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த உத்தேச சட்ட மூலத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென அந்த அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்த சட்ட மூலத்திற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.