யாழ்ப்பாணத்தில் சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவுகளை இலங்கை காவல்துறை சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட இரு மாடி வீடு மற்றும் 15 மில்லியன் ரூபா ரொக்கம் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த 2023 ஆகஸ்ட் 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபா ரொக்கத்துடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஒரு லாரியும் கைப்பற்றப்பட்டது.
மேற்கண்ட விசாரணைகளின் மூலம், மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் பணத்தைக் கொண்டு இந்த இரு மாடி வீட்டைக் கட்டியுள்ளமை கண்டறியப்பட்டது.
ஆரம்ப கைது நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட 15 மில்லியன் ரூபா ரொக்கம் தற்போதும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது.
இதற்கமைய, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வீடும் பணமும் அக்டோபர் 15, 2026 முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.