கொழும்பு கங்காராம விிகாரையானது, புது தில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் மையம் (IIC) மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், 'SAMHITA' திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க பனையோலைச் சுவடிகளைப் பாதுகாத்து டிஜிட்டல் மயமாக்கும் முக்கியப் பணியை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு முன்னேற்ற ஆய்வு, ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் தளப் பயணம் ஆகியவை இன்று வெள்ளிக்கிழமை (23) கங்காராம விகாரையில் நடந்தது.
இதன் மூலம் அழைக்கப்பட்ட பிரமுகர்கள், நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் நடந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையைக் நேரில் பார்வையிடவும் வாய்ப்பு ஏற்பட்டது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 100 வரலாற்றுச் சிறப்புமிக்க பனையோலைச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதும் பட்டியலிடுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த செப்டம்பர் 2026 இல் தொடங்கப்பட்ட இப்பணிகள், ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்புப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து வரவிருக்கும் நவம்பர் 2026 இன் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்தர டிஜிட்டல் படப்பிடிப்பு, முறையான ஆவணப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் எளிதில் சேதமடையக்கூடிய நிலையில் உள்ள இந்த மூல ஆவணங்கள் டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுவதுடன், அவற்றின் அசல் பிரதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரால் தொடங்கப்பட்டு, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் கல்வியில் முக்கிய பங்காற்றிய மறைந்த கலபொட ஞானிஸ்ஸர தேரர் (பொடி ஹாமதுரு) உள்ளிட்ட பல தேரர்களின் வழிகாட்டலில் வளர்ந்த கங்காராம விகாரையின் வரலாற்று மரபைத் தொடரும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
தற்போது விகாராதிபதி கலாநிதி கிரின்ஜே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் இந்த வரலாற்றுச் சேகரிப்புகள் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ஆன்மீக, வரலாற்று மற்றும் கலாச்சார உறவை இத்திட்டம் மேலும் வலுப்படுத்துகிறது.
பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்புக்குக் கங்காராம விகாரை தனது சிறப்பான ஆசீர்வாதங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மேலும், இந்தியா இன்டர்நேஷனல் மையத்தின் தலைவர் ஸ்ரீ ஷியாம் சரண், பணிப்பாளர் ஸ்ரீ கே.என். ஸ்ரீவஸ்தாவ், செயலாளர் ஸ்ரீ கன்வால் வாலி, திட்டப் பணிப்பாளர் டாக்டர் சுதா கோபாலகிருஷ்ணன், திட்ட முகாமையாளர் நிஹாரிகா குப்தா, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ. சந்தோஷ் ஜா மற்றும் தூதரக அதிகாரிகளின் பங்களிப்பையும் கங்காராம விிகாரை பாராட்டியுள்ளது.
இம்முயற்சியானது வெறும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரப் புரிதலையும் நட்புறவையும் ஆழப்படுத்துவதுடன், எதிர்கால கல்வி ஆராய்ச்சிக்கும் பௌத்த ஆய்வுகளுக்கும் பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.