பெருவில் நடைபெற்ற பிரியாவிடை திருப்பலிக்குச் செல்லும் வழியில், பொதுமக்கள் கூட்டத்திலிருந்து வீசப்பட்ட ஜெபமாலை போன்ற பொருளொன்று பாப்பரசர் 14 ஆம் லியோவின் கண்ணுக்கு அருகில் பட்டுள்ளது.

 

நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற இந்தச் சம்பவம், தென் அமெரிக்காவிற்கான தனது 12 நாள் பயணத்தை நிறைவு செய்து ரோமுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்டபோது நிகழ்ந்துள்ளது.

பொதுமக்கள் வீசும் பொருட்களை லாவகமாகப் பிடிப்பதில் பாப்பரசர் லியோ பிரபலமானவராக இருந்து வருகின்றார். தனது பயணங்களின்போது விசுவாசிகள் வீசும் மென்மையான பொம்மைகள், கொடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அவர் லாவகமாகப் பிடித்துள்ளார்.

ரோமில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போது, சிகாகோவைச் சேர்ந்தவர்கள் வழங்கிய பீட்சாவைக்கூட அவர் பெற்றுக்கொண்டிருந்தார்.

எனினும், திங்கட்கிழமை பெருவின் தலைநகர் லிமாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் பெருமளவான மக்கள் திரண்டிருந்த நிலையில், பாப்பரசர் பயணித்த வாகனத்தை நோக்கி வீசப்பட்ட பொருளைப் பிடிக்க அவர் தவறியுள்ளார்.

திருப்பலிக்குச் செல்லும் வழியில் வாகனத்தில் இருந்தவாறு பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருந்தபோது, குறித்த பொருள் வீசப்பட்டதைத் தொடர்ந்து பாப்பரசர் தனது கண்ணைத் தடவிக்கொண்ட காட்சிகள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பதிவாகியுள்ளன.

 

கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, வீசப்பட்ட பொருள் ஜெபமாலையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசரிடம் ஆசி பெறுவதற்காக விசுவாசிகள் பொதுவாக ஜெபமாலைகளை அவரிடம் வழங்குவது வழக்கமாகும்.

எனினும், இந்தச் சம்பவத்தில் பாப்பரசருக்கு காயம் ஏற்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் வெளியாகவில்லை. அவர் தனது பயணத்தைத் தொடர்ந்து, பிரியாவிடை திருப்பலியிலும் பங்கேற்றுள்ளார்.

அந்தத் திருப்பலியில் உரையாற்றிய பாப்பரசர், பெருவில் தமக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்நாட்டைத் தனது தாய்நாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

71 வயதான பாப்பரசர் லியோ, டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவராவார். தனது வயதுக்கு மாறாக சுறுசுறுப்புடனும் லாவகமாகவும் செயற்படுபவர் என அவர் அறியப்படுகிறார்.

இதற்கு முன்னரும் ரோமில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, வீசப்பட்ட பொருளொன்றைப் பிடிக்க முயன்றபோது தனது வாகனத்தின் பின்புறத்திலிருந்த வத்திக்கான் காணொளிப் பதிவாளரைத் தவறுதலாகத் தட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. அச்சம்பவத்திலும் அவர் பொருளைப் பிடிக்கத் தவறியதுடன், காணொளிப் பதிவாளரிடம் மன்னிப்பும் கோரியிருந்தார்.