குருநாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் வாள் ஒன்றை ஏந்தியவாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குறித்த 48 வயதுடைய சந்தேகநபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நபரின் செயற்பாடு அடங்கிய காணொளி பின்னர் சமூக ஊடகங்களில் பரவியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குருநாகல் காவல் துறை நிலைய அதிகாரிகளினால் நேற்று திங்கட்கிழமை (16) குருநாகல் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலாவ, கலபாவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது சந்தேகநபரின் வசம் இருந்ததாகக் கருதப்படும் வாள் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை (17) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குருநாகல் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.