வடகொரியாவையும் சீனாவையும் இணைக்கும் புதிதாகத் திறக்கப்பட்ட யாலு ஆற்றுப் பாலம் வழியாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீன எல்லை நகரமான டான்டாங்கிற்கு ஒருநாள் விஜயம் மேற்கொண்ட பின்னர், கிம் ஜாங் உன் தாயகம் திரும்பியதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற இந்தப் பயணத்தின்போது, சீனாவின் உயர்மட்ட அரசியல் அதிகாரியான வாங் ஹுனிங்கும் கிம்முடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “அன்பான வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும்” வாங் ஹுனிங், கிம் ஜாங் உன்னிடம் தெரிவித்ததாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளையும் இணைக்கும் புதிய யாலு ஆற்றுப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்தப் பாலம் திறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர் கிம் ஜாங் உன் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆசியாவின் முக்கிய பொருளாதார வல்லரசான சீனாவுக்கும், அணுவாயுத வல்லமையைக் கொண்ட அதன் அண்டை நாடான வடகொரியாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை இந்த விஜயம் மேலும் வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

மேலும், கிம் ஜாங் உன்னும் வாங் ஹுனிங்கும் டான்டாங்கில் அமைந்துள்ள கொரியப் போர் நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டுள்ளனர். கொரியப் போரின்போது வடகொரியாவுடன் இணைந்து போரிட்ட சீன வீரர்களுக்கு கிம் ஜாங் உன் அங்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு எதிராக ஒரு “புதிய பனிப்போரை” உருவாக்கும் நோக்கில், சீனாவுடனும் ரஷ்யாவுடனும் வடகொரியாவை இணைக்க கிம் ஜாங் உன் முயற்சிப்பதாகவும், இந்த விஜயம் அவரது வெளிவிவகாரக் கொள்கையில் அதிகரித்து வரும் தீவிரத்தன்மையைப் பிரதிபலிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், யாலு ஆற்றின் குறுக்கே சுமார் 3 கிலோமீற்றர் (1.9 மைல்) நீளத்தில் அமைந்துள்ள புதிய பாலத்தின் திறப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தையும் இது பிரதிபலிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.