ஜேர்மனியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஹிட்லருக்காகக் கட்டப்பட்டு ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’  என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

பனி மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் அவசரகால சேவையினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடிய நிலையில், தீவைப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (23) இரவு சுமார் 9.15 மணியளவில் அலாரம் ஒலித்ததைத் தொடர்ந்து, பெர்ச்ச்டெஸ்கேடன் மாவட்ட அவசரகால சேவையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குகை வழிகள் மற்றும் குறுகிய மலைப்பாதைகள் ஊடாக சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும், மலைப்பாதையில் முன்னேறிச் செல்லும்போது கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் கண்டுள்ளனர்.

இதன்போது, அந்தப் பாதையில் மோட்டார் சைக்கிளில் எதிர்த்திசையில் கீழ்நோக்கி வந்த ஒருவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜேர்மன் பிரஜை எனவும், அவருக்கு இந்தப் பகுதியில் தொடர்புகள் இருந்தபோதிலும் தற்போது அங்கு வசிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, மனநலப் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும், இதையடுத்து அவர் மனநல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்தக் கட்டிடத்தின் வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, தீ விபத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் மொழியில் ‘கெல்ஸ்டீன்ஹாவுஸ்’ (Kehlsteinhaus) என அழைக்கப்படும் இந்தக் கட்டிடம், கடல் மட்டத்திலிருந்து 1,834 மீற்றர் (6,017 அடி) உயரத்தில் உள்ள பாறை மலையில் அமைந்துள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படாத, பகல் நேரங்களில் பார்வையாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மலைப்பாதையின் முனையிலிருந்து, பாறைக்குள் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி மூலம் இந்தக் கட்டிடத்தை அடைய முடியும்.

இந்தக் கட்டிடம் 1952 ஆம் ஆண்டு முதல் உணவகம் மற்றும் தேநீர் விடுதியாக இயங்கி வருவதுடன், அதன் வரலாற்றுச் சிறப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றுள்ளது.

நாஜி ஆட்சியாளர் அடோல்ஃப் ஹிட்லர் இந்தக் கட்டிடத்தை அரிதாகவே பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதே பகுதியில் அமைந்திருந்த அவரது மற்றொரு இல்லமான ‘பெர்க்ஹோஃப்’ 1952ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.

மலையின் சற்று கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஓபர்சால்ஸ்பெர்க் ஆவண மையம், இப்பகுதியின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தத் தீ விபத்தால் அந்த மையம் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்குள்ளான ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ கட்டிடம் மீண்டும் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தீ விபத்து இடம்பெற்று சில மணி நேரங்களே கடந்துள்ள நிலையில், சீரமைப்புப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.