பிரான்சில் ஆடம் என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ஆடம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த வழக்கத்துக்கு மாறான அதிக அளவிலான மழையால், நதிகளின் கரைகள் உடைந்துள்ளதால், பிரான்சில் பல இடங்களில் பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.

தெற்கு பிரான்சில் நேற்று காலை ஒருவர் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பின் அவரது உயிரற்ற உடல்தான் மீட்கப்பட்டுள்ளது. 

பிரான்சில் கோரத்தாண்டவமாடிய ஆடம் புயல்: ஒருவர் பலி | Atleast One Person Dies In France Adam Storm

பெருவெள்ளமும் நிலச்சரிவும் பல வீடுகளை சேதமடையச் செய்துள்ளதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துவிட்டதாகவும், மரங்கள் விழுந்துள்ளதாகவும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் Saint-Mitre-les-Remparts நகர மேயர் தெரிவித்துள்ளார். 

நகரின் விவசாயத்துக்காக உருவாக்கப்பட்ட கால்வாய் நிரம்பி வழிவதால், அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிடலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. 

Haute-Corse பகுதியில் மழை மற்றும் பெருவெள்ளம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு கோர்சிக்கா பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இரண்டு ஆரஞ்சு எச்சரிக்கைகளும், 14 மஞ்சள் எச்சரிக்கைகளூம் விடுக்கப்பட்டுள்ளன. 

பிரான்சில் கோரத்தாண்டவமாடிய ஆடம் புயல்: ஒருவர் பலி | Atleast One Person Dies In France Adam Storm

மேலும், 60 முதல் 80 மில்லிமீற்றர் மழை, இடியுடன் கூடிய மழை, மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று, கல்மழை, மின்னல் மற்றும் சூறாவளியும் ஏற்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. 

மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், அருகிலுள்ள ஸ்பெயினில், நிலைமை பிரான்சைவிட மோசமாக உள்ளது.

ஸ்பெயினில், ஆடம் புயலால் 48 மணி நேரத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளார்கள். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளிலும் மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.