தென்கொரியாவின் முக்கிய துறைமுக நகரான புசானில் , அங்குள்ள ஒரு குறுகிய கால்வாய்க்குள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கியிருந்த 3 மீற்றர் (9.8 அடி) நீளமுள்ள ராட்சத சாம்பல் நிற பெண் சுறா ஒன்று நேற்று புதன்கிழமை ( 21) அதிகாரிகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டு திறந்த கடலுக்குள் விடுவிக்கப்பட்டது.
புசான் வடக்கு துறைமுகத்தின் கொரியப் பெயரைக் கொண்டு 'புகாங்கி' எனப் பெயரிடப்பட்ட இந்த டஸ்கி வகைச் சுறா (Dusky Shark), கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து இந்த கால்வாய்ப் பகுதியில் தவித்து வந்துள்ளது.
அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 29 மற்றும் ஒக்டோபர் 2 ஆகிய திகதிகளில் படகுகள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், வலைகளை விரித்தும் இந்த சுறாவை வெளியேற்ற முயன்றுள்ளனர். ஆனால், சுறா வலைகளுக்கு மேல் பாய்ந்தும், படகுகளைத் தவிர்த்தும் கால்வாய்க்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்ததால் முந்தைய இரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
சுறா கால்வாயில் இருந்த ஒரு மாத காலத்தில் அது எதையும் உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், குளிர்காலம் நெருங்குவதால் நீரின் வெப்பநிலை குறைந்து வருவது அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், அதனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு மூன்றாவது முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது மீட்புப் பணியில், அதிகாரிகள் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர். ஒரு பெரிய மிதக்கும் தளத்தைக் கால்வாய் முழுவதும் பரப்பி, அதன் மேல் நின்றுகொண்டிருந்த ஊழியர்கள் துடுப்புகள் மூலம் சுறாவை முன்னோக்கி நகர்த்தினர். கால்வாயின் இரு கரைகளிலும் இருந்த ஊழியர்கள் கயிறுகள் மூலம் இந்த மிதக்கும் தளத்தை ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இழுத்துச் சென்றனர்.
இறுதியாக, கால்வாயின் நுழைவாயிலுக்குக் கொண்டு வரப்பட்ட சுறா, மீண்டும் உள்ளே வராதவாறு வலைகள் கொண்டு தடுக்கப்பட்டு கடலுக்குள் விரட்டப்பட்டுள்ளது. இந்த அரிய மீட்புப் பணியைக் காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கால்வாயின் இருபுறமும் திரண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.
இந்த சுறாவைக் காண இதுவரை 1.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இக்கால்வாய்க்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுறா வெற்றிகரமாக வெளியேறியதைத் தொடர்ந்து புசான் மேயர் சுன் ஜே-சூ தனது முகநூல் பக்கத்தில், "புகாங்கி மற்றும் புசானின் நீர்நிலைகள் மீது மக்கள் காட்டிய பெரும் ஆர்வத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். புகாங்கி இனி நீலக் கடலில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் என்று நம்புகிறோம்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தற்போது கடலுக்குள் சென்றுள்ள சுறா, அருகில் உள்ள ஒரு கப்பல் துறைப் பகுதியில் நீந்திச் செல்வதை யோன்ஹாப் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.