பிலிப்பைன்ஸில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில், நான்கு விமானிகள் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் நேற்றுமுன்தினம் ‘எஸ்எப்-260’ ரக 2 விமானங்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின.
இதுகுறித்து, பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆல்வின் கபிங்குயான் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பிலிப்பைன்ஸில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ‘எஸ்எப்-260’ ரக ராணுவ விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில், நான்கு விமானிகள் உயிரிழந்தனர். இதில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானப்படையிடம் உள்ள ‘எஸ்எப்-260’ ரக விமானங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் கடந்த சில ஆண்டுகளாக ராணுவ விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. கடந்த மே மாதம், வடக்கு பிலிப்பைன்ஸின் பெங்குவெட் மாகாணத்தில் பயிற்சி விமானப் பயணத்தின்போது மற்றொரு ‘எஸ்எப்-260’ ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 ராணுவ விமானிகள் உயிரிழந்தனர்.