கொழும்பு பொது நூலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கருத்தரங்கில், அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், குறிப்பாக தொழிற்சங்கங்களை இலக்கு வைத்தும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையிலும் இந்த அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டனர்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களே பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமானவை என்றும், இந்தப் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடளாவிய ரீதியில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

புதிய சட்டமூலங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு இன்று மாலை 5:00 மணிக்குத் தம்முடன் பேச்சுவார்த்தையில் இணையுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

 முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவும் மக்களுக்கு எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை எனவும், அந்தத் தோல்விக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்கும் நோக்கிலேயே இச்சட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களின் கீழும் இவ்வாறான கடுமையான அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அவற்றைத் தோற்கடித்த விதத்தை நினைவுகூர்ந்த பிரதிநிதிகள், தற்போதைய அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டங்களாலும் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளும் ஜனநாயகமும் பாரியளவில் சீர்குலையும் எனச் சுட்டிக்காட்டினர்.

இந்த அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக அனைத்துத் தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் ஒன்றிணைந்து விரிவான நடவடிக்கையொன்றை முன்னெடுக்க வேண்டும் எனக் கருத்தரங்கில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

 இச்சூழ்நிலையில், எதிர்வரும் மாதத்திற்குள் அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பலமான எதிர்ப்புப் போராட்டத் தொடரொன்றை முன்னெடுக்கத் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.