ஈழத் தமிழர்களின் கரிநாள் 04-02-2026

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 77 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு மரபுவழித் தமிழர் தாயகமானது சிதைக்கப்பட்டு, இன்று அதன் இறுதிக் கட்டத்தில் நிற்கிறது. இது அரசாங்கங்கள் மாறினாலும் சிறீலங்கா அரசு ஒரு மோசமான இனவழிப்பு மூலோபாயத்தினை தங்கு தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதை அம்பலப்படுத்துகிறது.

1827 இல் பிரித்தானிய அரசின் ஆவணங்கள், கிழக்கு மாகாணத்தில் 76 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த இடம் என குறிப்பிட்டுள்ளது. 1911 ஆம் ஆண்டுக் குறிப்புகளைப் பார்த்தால், வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்கள் தாயகம் என்பதற்குரிய ஆதாரம் உள்ளது.

அதற்குப் பின்னர் தற்போது 2009 வரைக்கும் உள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தின், குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளை விழுங்கி விட்டது.

2009க்குப் பின்னர் சிங்கள குடியேற்றங்கள் எந்த வித எதிர்ப்பும் இன்றி தங்குதடையின்றி தொடர்கின்ற ஆபத்தான நிலை இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கென மரபுவழித் தாயகம் இல்லை என்றும், அவர்கள் ஒரு தேசிய இனம் இல்லையென்றும், அதனால் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லையென்றும், இறுதியான கணக்கை முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்கிறது. இது இனவழிப்பின் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்க வேண்டும்.

அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழ்மக்கள் வடகிழக்கு இணைந்த தமிழர் மரபுவழித்  தாயகத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும். இதற்கான சர்வதேச ஒத்துழைப்பினை கோர வேண்டும்.

வடகிழக்கில் தமிழ் மக்களுக்கெதிரான அனைத்து விதமான இனவழிப்பு, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உள்ளடங்கிய அனைத்துக் குற்றங்களுக்கும் உலகளாவிய நாடுகளின் மத்தியில் முன்னெடுத்துச் சென்று, அவர்களது ஆதரவைத் திரட்டி, அதற்கான ஒரு சர்வதேச நீதி விசாரணையை உருவாக்குவதற்கு, நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.

வடகிழக்கு, தமிழர் தாயகத்தில்  தமிழ் மக்கள் தமது சட்டபூர்வமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை சர்வதேசத்திடம் கொண்டு சென்று அதை வென்றெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களினுடைய தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை உள்ளடங்கிய, அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பெப்ரவரி 04 ஆம் திகதி ஆகிய கரிநாளில் சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்று தமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.