டென்மார்கில் நடைபெற்ற அரசியல் சந்திப்பு

18.09.2025 இல் டென்மார்க் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகளுடன் அரசியல் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் பேரவையின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பில் செம்மணி புதைகுளி உட்பட, தாயகத்தில் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுளிகள் பற்றிய விபரங்களையும், இன்றுவரை தொடரும் தமிழினவழிப்பு பற்றிய விடயங்களையும் விளக்கி, அதற்கான நீதியை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் ஐநா மனிதுரிமைகளின் ஆணையத்தினால் வெளியிடப்பட்ட மாதிரி அறிக்கையில் முன்மொழியப்பட்ட பரிந்துரையில், சிறீலங்கா அரசு தனது குற்றங்களைத்“ தம்மை தாமே சுயவிசாரணை செய்யவேண்டும்” என்ற விடயம், பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பதையும் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் சிறீலங்கா அரசின் மீதும் அதன் நீதித்துறை மீதும் துளியளவும் நம்பிக்கை இல்லை என்பதனை, வரலாற்று ரீதியாக ஆதரப்படுத்தி விளக்கப்பட்டது.

அத்துடன் எந்த ஒரு சிங்கள அரசும் தழிழ் மக்களுக்கான நீதியையோ, அரசில் தீர்வையோ வழங்க முன்வராது என்பதையும் அதன் காரணங்களையும், இன்றுவரை உள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் நடைமுறைகளின் அடிப்படையில் உதாரணம் காட்டி தெளிவுப் படுத்தப்பட்டது.

இவ் விடயங்களை டென்மார்க் அரசு சர்வதேச அரங்குகளில், தமது ராஜதந்திர உறவுகள் மூலம் எடுத்துரைப்பதுடன், தமிழின அழிப்பிற்கான நீதியை பெற்றுக்கொள்ள உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகள்