தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்!

“தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.’’

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 18.07.2023

ஈழத்தமிழர்கள் நாம் இழந்து போன எமது தேசத்திற்கான விடுதலைப்போராட்ட வாழ்விலே பெருமளவிலான உயிரிழப்பைச் சந்தித்து 40 ஆண்டுகள் (23.07.2023) ஆகிவிட்டது. 1983 யூலைக்கலவரம் இடம்பெற்று குறித்த சிலநாட்களில் மட்டும் அந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொன்று அழிக்கப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

62 அரசியல் கைதிகள் கொடூரமாக வெலிக்கடைச்சிறையில் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான தமிழர் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இதிலிருந்து உயிர் தப்பியே சொந்தங்களையும், பெற்றோர்களையும், தாய்மண்ணையும் விட்டு கண்ணீரோடும், கவலையோடும், துயரத்தோடும் அகதிகள் என்ற பெயருடன் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தோம்.

எமது கடும் உழைப்பு, திறமை, என்பவற்றை மூலதனமாகக் கொண்டு இத்தனை வருடகாலங்களில் எம்மை வளப்படுத்திக் கொண்டோம் என்பதற்கு மாற்றுக்கருத்திருக்காது. இதனை மனிதநேயத்துடன் கருணைகொண்டு ஈழத்தமிழர்களை சர்வதேச நாடுகள் எல்லாம் அரசியல் அடைக்கலத்தை வழங்கினர்.

வாழ்ந்த 40 வருடகாலத்தில் சகல வழிகளிலும் எமது வளர்ச்சியானது நாம் வாழும் நாடுகளில் உயர்வானதும் நற்பெயரையுமே பெற்றுத் தந்திருக்கின்ற இவ்வேளை எம் தாயகத்தில் அண்மைக் காலங்களில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் அதன் எச்சங்கள் எல்லாமே அரச படையாலும், அதன் கூலிப் படையாலும், அதற்குத் துணைபோன தமிழின கோடரிக்காம்புகளாலும் நடாத்தப்பட்டது என்பது தமிழர்கள் எமக்கு மட்டுமல்ல, பௌத்த சிங்கள இனவெறி அரசுக்கும் தெரிந்ததே! ! இப்படுகொலைகள் 40 வருடங்களாக மூடிமறைக்கப்பட்டு கட்சிதமாக சர்வதேசத்தின் கண்களில் படாது பார்த்துக் கொண்டது. 16.07.2023 மட்டக்களப்பு பாலமீன்மடுப்பகுதியில் உள்ள தமிழர் நிலத்தில் பாரிய மனிதப்படுகொலை 32 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்படுகொலை புதைகுழி உள்ளிட்ட எங்கள் மண்ணில் பல குழிகள் நீண்டுகொண்டே செல்கின்றன. இதனை சிங்கள பேரினவாத பௌத்த அரசே செய்தது என்பதற்கு சான்று, படுகொலையை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டிய அரசு அதன் கடமையிலிருந்து பின்நிற்பதே இதற்கு சான்றாகும்.

தமிழீழ தேசத்தில் கண்டுபிடிக்கப்படும் புதைகுழிகள் சர்வதேசரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் இந்த 40 ஆண்டுகாலப் பகுதியிலும், அதற்கு முன்னராகவும் சிங்கள அரசுகளுடன் துணைபோனவர்தான் இன்றைய சிங்கள அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள். இவர் இதற்கு பொறுப்புக்கூறும் இடத்தில் இருப்பதுடன் பெரும் பங்கும் இவருக்கு உண்டு என்பதை தமிழர்கள் நாம் மட்டுமல்ல சர்வதேச அமைப்புகளும் இதனைத்தான் கூறுகின்றன. ஆனால், இவற்றை மூடிமறைக்க உலக நாடுகளுக்கும், ஐரோப்பிய ஆசிய நாடுகளுக்கும் இவர் சென்று வருகின்றார் என்பதே உண்மையாகும். இதனை உலகத் தமிழர்கள் நாமும் இன்றுவரை பெரிதாக ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று எம்மிடம் கேள்வியை எழுப்புகின்றவர்கள் நாம் வாழும் நாட்டின் அரச, அரசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும், மக்களுமாவர்.

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!

40 வருடகாலமும், அதற்கு முற்பட்ட படுகொலைக்கு உள்ளான எமது மக்களின் உயிரற்ற எலும்புக்கூடுகள் கூட தமக்கான நீதி கேட்பதாகவே இப்புதைகுழிகள் உணர்த்துகின்றன. சிங்கள தேசம் தமிழனப்படுகொலையின் சான்றுகளை நிச்சயம் அழிக்க முயலும், அவற்றை இனி மறைக்கச்செய்யும், எம் நினைவிலிருந்தும் மறக்கவும் செய்யும். இனவாத கருத்துக்களை இன்று வரை கக்கிக்கொண்டும், காக்கிச்சட்டையை காவிச்சட்டைகள், கனவான்களின் கண்முன்னாலேயே காடைத்தனம் புரிவதையும் காண்கின்றோம்.

இந்த நிலைப்பாடு நீடிக்க விடப்போகின்றோமா? அரசியல் மற்றும் சனநாயக ரீதியில் சர்வதேசத்தின் கதவுகளைத் தொடர்ந்து நாம் தட்டவேண்டாமா? உயிர்அச்சத்திலும் சனநாயகப் போராட்டத்தை நடத்தும் எம்மவர்களுக்கு வலுக்கொடுப்போம்.

கறுப்புயூலை 23 ( ஞாயிற்றுக்கிழமை) பி.பகல் 2:30 மணிக்கு பாரிசில் நடைபெறவுள்ள பேரணியில் நாம் ஒன்றாக, ஓரணியில் நின்று பயணிப்போம்; நீதிகோருவோம் வாருங்கள்! 14:30 மணிக்கு நிறைவடைகின்றது.