தமிழின அழிப்பு நினைவுநாள் போட்டிகளும் அதற்கான மதிப்பளிப்பும்.-யேர்மனி

தமிழின அழிப்பு நினைவுநாள் மே18 இனை உலகத் தமிழினம் எழுச்சியோடும் உணர்வோடும் நினைவிற்கொள்ளும் வலிசுமந்த இந்நாளில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைத்து ,நெஞ்சுருகி நினைவேந்திடுவோம்.

தமிழின அழிப்பினை நினைவிற்கொள்ளும் இவ்வேளையில் ,தமிழின அழிப்பினை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்குடனும் எம்மினத்திற்கு இழைக்கப்பட்ட அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் அறிந்து அதற்கான சான்றுகளைத்தேடி வெளிக்கொணரும் வகையிலும் அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினால் தமிழின அழிப்பு தொடர்பான கலைத்திறன் போட்டிகள் அனைத்துல ரீதியில் நடாத்தப்பட்டது.

இப்போட்டிகளில் பல நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
எம்மால் நாடாத்தப்பட்ட இக் கலைத்திறன் போட்டியின் நோக்கமானது ,இன்றைய இளைய தலை முறையினருக்கு ,தமிழின அழிப்புத் தொடர்பான தேடல்களை ஊக்குவிப்பதற்கும் அதன் வழியாக தமது புரிதல்களைக் கலைவடிவங்களூடாக வெளிப்படுத்துவதுமாகும்.

கலைதிறனூடாக நடாத்தப்பட்ட போட்டிகளில் இளைய தலைமுறையினர் தம்முடைய திறன்களைத் தமிழின அழிப்பினை கருப்பொருளாக கொண்டு ,ஓவியமாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் காணொளியாகவும் இனவழிப்பு தொடர்பான தமது புரிதல்களையும் உணர்வுகளையும் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப்பிரிவினரின் கலை வெளிப்பாடுகளும் அவர்களின் மனதில் பதிந்திருக்கும் எம்மினத்தின் வலிகளை வெளிக்கொணர்ந்ததாகவே காணமுடிகிறது.

சிங்களப் பேரினவாதத்தால் எமது இனம் காலாகாலமாக அனுபவித்த இனவழிப்பின் உச்சமாக 2009 இல் முள்ளிவாய்க்கால் வரை ,எம்முறவுகளில் இலட்சத்திற்கும் மேற்பட்டோரை இழந்தோம். அந்த நினைவின் வலிகளை சுமந்து நிற்கும் இந்நாளில் இப்போட்டிகளில் கலந்துகொண்ட பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தி தெளிவூட்டிய பெற்றோர்களுக்கும் அனைத்துல தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் அகம் நிறைந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

அத்தோடு,போட்டிகளில் கலந்து கொண்டு வெளிப்படுத்திய படைப்புக்களில் சிறப்பான படைப்புக்கள் சீராக்கப்பட்டு,தமிழின அழிப்பின் ஆவணமாக வெளிக்கொணரவுள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம்.தொடர்ந்தும் தமிழின அழிப்பினை அடுத்த தலைமுறையினர்க்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் வரலாற்றுக் கடமையினை உணர்ந்து ,அடுத்துவரும் ஆண்டுகளில் அனைத்துப் பிள்ளைகளையும் இப்போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கமளிக்க வேண்டுமென்று அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்,
அனைத்துலகத்தொடர்பகம்