தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு டுசில்டோப் நகரிலுள்ள தொடரூந்துநிலையத்திற்கு முன்பாக பேரணியோடு ஆரம்பமாகியது. யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைக்க பிற்பகல் இரண்டு மணிக்கு அகவணக்கத்தோடும் இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி. வானதி அவர்களது உரையோடும் பேரணி மத்தியமாநில சட்டமன்றத்தினை நோக்கி பேரெழுச்சியோடு நகரத்தொடங்கியது.
தமிழ்க்கல்விக்கழகத்தின் மாணவர்கள் ஒப்பனையும் பாவனையும் வடிவில் இன அழிப்பினை வெளிப்படுத்த , எமது இளையவர்கள் பேரொலி எழுப்ப மக்களும் இணைந்து முழக்கமிட்டனர். பேரணி எழுச்சியோடு சென்றுகொண்டிருக்க இளையவர்கள் தமிழின அழிப்புப் பற்றிய துண்டுப்பிரசரங்களை வேற்றின மக்களுக்கு வழங்கியதோடு விளக்கங்களையும் கொடுத்தனர். பிற்பகல் 15:30 மணிக்கு மத்தியமாநில சட்டமன்றத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலிற்கு பேரணி வந்தடைந்தது.
பேரணி நினைவுத்திடலை வந்தடைந்ததும் சட்டத்தரணியும் தமிழீழத் தேசியக்கொடி சார்ந்த குழுவின் சட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய திருமதி.லக்சி லம்பேர்ட் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியானது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஈகச்சுடரினை முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரின்போது தனது தாயார் உட்பட பல உறவுகளை இழந்து, யேர்மனிய மண்ணிலே வாழ்ந்துகொண்டிருப்பவரும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தாயகநலன் பொறுப்பாளருமான திரு.இராயன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் நினைவிடத்திற்கான மலர்மாலையினை வீரவேங்கை கயிலன் அவர்களின் சகோதரர் திரு.கிறேமர் சேகர் அவர்களும் வீரவேங்கை கேதீஸ் மற்றும் எல்லைப்படைமாவீரர் சந்திரசேகர் ஆகியோரின் சகோதரி திருமதி. தயாளினி ஜெயசங்கர் அவர்களும் அணிவித்தனர். பொதுமக்கள் நினைவுத்தூபிக்கான மலர்மாலையினை தமிழ் இளையோர் அமைப்பின் யேர்மனிக்கிளைத் துணைப்பொறுப்பாளர் செல்வி. வானதி நிர்மலதாசன் அவர்களும் தமிழப் பெண்கள் அமைப்பின் யேர்மனிக்கிளைத் துணைப்பொறுப்பாளர் செல்வி.தமிழினி பத்மநாதன் அவர்களும் அணிவித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு உணர்வோடு கூடியிருந்த மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் மண்ணிலே சாவடைந்த அத்தனை உயிர்களையும் நினைந்து மலர் சுடர்வணக்கம் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவைத்தாங்கிய இசைவணக்கம், கவிவணக்கம், நினைவுரைகள், வெளிநாட்டவர்களின் உரைகள், எழுச்சி நாடகங்கள் போன்றன இடம்பெற்றன. அத்திடலிலே எமது மக்களின் வாழ்வாதாரமாகவும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் அடையாளமாகவும் இருக்கின்ற முள்ளிவாயக்கால் உப்புக்கஞ்சி பரிமாறப்பட்டது. நிறைவாக இளையவர்களின் உறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடல் இசைத்து, எமது தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.




