“தமிழ்ப்பற்றாளர்” சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதிவணக்கமும் மதிப்பளிப்பும்

தேசியச் செயற்பாட்டாளராகத் தொடங்கித் தமிழ்க் கல்விக்கழகத்தோடு இணைந்து யேர்மனிய மண்ணிலே வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயரிய இலட்சியத்தோடு கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியாகிப் பின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டளராகவும் பணியாற்றிய உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கான இறுதி வணக்கமும் மதிப்பளிப்பும் மீசவ் (iesau) நகரத்திலே சிறப்பாக நடைபெற்றது.

பொதுச்சுடரைக் கொம்பூர்க் நகரப் பிரதிநிதி திரு. பசுபதிப்பிள்ளை உதயமூர்த்தி ஏற்றிவைக்கத் தொடங்கிய நிகழ்விலே தமிழீழ தேசியக்கொடியினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப்பொறுப்பாளர் திரு யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை அவரது சகோதரர் திரு சின்னத்துரை புஸ்பலிங்கம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட, அன்னாரின் திருவுருப்படத்துக்கான மலர்மாலையை அவரது துணைவியாரான திருமதி சிவபாக்கியம் யோகலிங்கம் அவர்களும், அவரது பிள்ளைகளில் ஒருவரான செல்வி துர்க்கா யோகலிங்கம் அவர்களும் இணைந்து அணிந்ததைத் தொடர்ந்து, தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ்க் கல்விக் கழகத்தினர்,தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள், உற்றார், உறவுகள், நண்பர்களென அனைவராலும் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அரங்கைக் கையேற்ற மாவீரர் பணிமனையால், அதனது மரபுகளுக்கமைவாகத் தேசியக்கொடி எடுத்துவரப்பட்டு மதிப்பளிப்புச் செய்யப்பட்டதோடு, அனைத்துல தொடர்பகத்தால் வழங்கப்பட்ட சிறப்புப் பட்டமான “தமிழ்ப்பற்றாளர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டதோடு அதற்கான சான்றிதழும், தேசியக்கொடியும் அவரது துணைவியாரிடம், பிள்ளைகளிடமும் கையளிக்கப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், தாயக நலன் பேணலகச் செயற்பாட்டாளர், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர், மற்றும் பிரிவுசார் பொறுப்பாளர்கள், தமிழாலயங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் நினைவுரைகள் மற்றும் நினைவுக்கவிதைகளும் இடம்பெற்றன. அனைத்துலக தொடர்பகத்தால் முதல்முறையாகத் “தமிழ்ப்பற்றாளர்” என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அப்பட்டத்தினை, யேர்மனியிலே தமிழ்மொழியையும் கலை பண்பாட்டையும், தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டிவரும் அமுதசுரபியாய் மிளிரும் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளரான உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்கள் பெற்றுள்ளமை தனிச்சிறப்பிற்குரியதாகும்.

இறுதி வணக்க நிகழ்விலே அன்னாரின் குடும்பத்தாரால் வாழ்க்கைத் தடங்கள்,, மற்றும் தோத்திரப் பாமாலை,, என இரு நினைவு நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, கணொளிவாயிலான நினைவுப் பகிர்வும் இடம்பெற்றது. தேசியக்கொடிக் கேயேற்போடு தமிழரின் தாகம் சுமந்து இறுதிவணக்கமும் மதிப்பளிப்பும் சிறப்பாக நிறைவுற்றது.

சமீபத்திய செய்திகள்