தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் அரும்பணியாற்றிய ஆர்வலர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி நவில்கிறோம்!

2ஆவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் அரும்பணியாற்றிய தமிழார்வலர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்முழு வடிவம் வருமாறு:-
நன்றி நவில்கிறோம்!
மொழியே இனத்தை இயக்கும் அச்சாணி. காலப்பெருவோட்டத்தில் கரைந்துபோகாத் தமிழ்மொழி எமது விடுதலைக்கான ஓட்டத்தை விரைவுபடுத்தும் ஆணிவேர். இந்த ஆணிவேரின் அடியொட்டி அசையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் 22வது பொதுத்தேர்வில் அரும்பணியாற்றிய தமிழார்வலர்களுக்கு நன்றி.
பிரான்சில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 65 தமிழ்ச்சோலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என 5563 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றினர். புலன்மொழி வளம், எழுத்து என ஈராற்றல் கொண்ட இரண்டாம்மொழிக் கல்விக்குரிய மதிப்பீட்டுத்தாள்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை அணியப்படுத்தித் தந்திருந்தது.
04.05.2024 முதல் நடைபெற்று வந்த புலன்மொழிவளத் தேர்விற்கு மண்டபங்களைத் தந்துதவிய நகர சபைகளுக்கும் அதற்கான நிர்வாக நடைமுறைகளை ஆற்றிய தமிழ்ச்சங்களுக்கும் எமது நன்றி.
இல்-து-பிரான்சு (Île-de-France) எழுத்துத் தேர்வு சிறப்புற நடந்தேற ஒத்துழைத்த அரச தேர்வு மண்டபத்தினர்க்கும் ஆர்க்கை (Arcueil) நகரசபைக்கும் பாரிசு போக்குவரத்துத் தன்னாட்சி ஆணையகத்திற்கும் (RATP) மற்றும் அரச அமைப்புகளுக்கும் எமது உளமார்ந்த நன்றி.
கொட்டும் மழையிலும் குழந்தைகளைப் பாதுகாத்துப் பெற்றோருக்கு ஒப்படைத்த களப்பணியாளர்களான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, அதன் உபகட்டமைப்புகள் மற்றும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினதும் கரங்களை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கிறோம்.
புலன்மொழிவளத் தேர்வு தொடங்கி எழுத்துத் தேர்வு வரை எம்முடன் இணைந்து நேர்த்திக்கும் நிறைவுக்கும் கைகொடுத்து, தமிழ் மொழியின் அடுத்த பாய்ச்சலுக்கான நம்பிக்கையை ஊட்டும் அளப்பறிய ஆற்றலுடைய தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றி.
தேர்வுப்பணிகளில் எம்மோடு இணைந்து ஒத்துழைத்த அனைத்துத் தமிழ்ச்சோலைகளினதும் தனியார் பள்ளிகளினதும் நிர்வாகிகள், தமிழ்ச்சங்கத்தலைவர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலைச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் எமது மனதார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்மொழியைப் பயிற்றுவித்து தாய்மொழி மீதான வேட்கையைத் தலைமுறைக்கடத்தலுக்கு ஊக்குவிக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுகள்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் 22 ஆவது தடவையாகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வினை நடாத்தி முடித்துள்ளது. அனைவரதும் ஒருமித்த ஒத்துழைப்பால் ஒவ்வோராண்டிலும் இத்தேர்வு மென்மேலும் சிறப்படைந்து வருகின்றது. இதற்குக் காரணமாய் திகழும் அனைவருக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி நவில்கின்றது.
தமிழுக்காய் வாழ்ந்திருப்போம்! தமிழால் இணைந்திருப்போம்!
சா. நாகயோதீஸ்வரன்
பொறுப்பாளர்
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு.