லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல். புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் நினைவாகவும், லெப் கேணல் சந்தோசம் அம்மான், லெப். கேணல் விக்ரர், லெப்கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் 2 ஆம் லெப். மாலதி ஆகியோரது நினைவுசுமந்து நுவாசிலுசெக் நகரத்தில் இன்று 09.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு.சீலன் அவர்கள் ஏற்றிவைக்க, குறித்த மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை லெப்.கேணல் விக்ரர் அவர்களின் சகோதரர், கப்டன் கஜன் அவர்களின் சகோதரர், 02.04.2000 அன்று பளை இத்தாவிலில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.காண்டீபனின் சகோதரி, 02.04.2009 அன்று ஆனந்தபுரம் பெட்டிச் சமரில் வீரகாவியமான மேஜர் பாரதியின் சகோதரி, 02.07.1998 அன்று வீரச்சாவடைந்த 2ஆம் லெப். இளந்தேவியின் சகோதரி மற்றும் மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 21.06.1987 அன்று சாவகச்சேரிப் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் திவான் அவர்களின் சகோதரி ஆகியோர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அணிவகுத்து சுடர் ஏற்றி மவர்வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வுகளாக திரான்சி தமிழ்ச் சோலை, இவ்றி சூசென் தமிழ்ச் சோலை மாணவியரின் மாவீரர் நினைவு சுமந்த எழுச்சி நடனங்கள், எழுச்சிப்பாடல்கள், தமிழர் கலை பண்பாட்டுக் கலைஞர்கள், தமிழ்ச் சோலை மாணவர்களின் எழுச்சிப்பாடல்கள், தமிழ்ப்பெண்கள் அமைப்பு உறுப்பினர் யசோ அவர்களின் 2 ஆம் லெப் மாலதி நினைவுக்கவிதை, என்பன மிகவும் சிறப்பாக இடம்பெற்றன..
நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.குறித்த மாவீரர்களின் ஈகம் பற்றிக் குறிப்பிட்ட அவர், எந்த ஒரு மாவீரரும் தனக்கு நினைவு வணக்கம் செய்யவேண்டும் என்று நினைத்து மாவீரர் ஆவதில்லை. அவர்களை நினைவில் கொள்வது எமது வரலாற்றுக் கடமை எனவும், அந்த மாவீரர்களை நாம் நினைவில் கொள்வதையிட்டு பெருமை கொள்ளவேண்டும் எனவும் அவர் தனது உரையில் கண்ணீரோடு தெரிவித்திருந்தார்.
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு பெற்றது.










