பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!

பிரான்சு பாரிசு நகரில் 08.11.2012 அன்று எதிரியின் துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் வித்துடல் விதைக்கப்பட்ட ஒபேவில்லியே துயிலும் இல்லப் பகுதியில் இன்று ( 08.11.2025) சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

மழைக்கு மத்தியிலும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஈகைச்சுடரினை கப்டன் பரதா, லெப்.பக்கி ஆகிய மாவீரர்களின் சகோதரர் ஏற்றிவைக்க, மலர்மாலையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முன்னாள் பொறுப்பாளரும் மாவீரர் லெப்.கானத்தரசியின் சகோதரருமான திரு.பரமலிங்கம் அவர்கள் அணிவித்தார்.

அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்திருந்தனர்.

நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.

கேணல் பரிதி அவர்களின் வழிகாட்டலில் கடந்தகாலங்களில் நாம் பயணித்த விடயங்கள் பற்றியும் அவரின் வழித்தடத்தைப் பின்பற்றிப் பயணிக்க வேண்டும் என்பதாகவும் அவரது உரை அமைந்திருந்தது..

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது..

இதேவேளை கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் காலை 10.00 மணிக்கு சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.