பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற சங்கொலி விருது தாயக விடுதலைப் பாடற்போட்டி – 2025

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் ஐரோப்பிய ரீதியிலான தாயக விடுதலைப்பாடற் போட்டி சங்கொலி விருது 2025 இம்முறை 16 ஆவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான Borurse du Travail Saint Denis மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்த எம் தேசத்தின் தளபதிகள் லெப்.கேணல். குமரப்பா, லெப்.. கேணல். புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் இந்திய அரசின் அன்றைய ஆட்சியாளர்களின் சதியில் சிக்குண்டு சைனைட்குப்பியை உண்டு வீரகாவியமானவர்களின் 38 ஆவது ஆண்டினை நினைவுகூர்ந்தும், மாவீரர் நினைவாக ஈகைச்சுடரினை 20.11.2007 அன்று மன்னார் மாவட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர் 2ஆம் லெப்.வைகையன். அவர்களின் சகோதரி ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.அகவணக்கம் செலுத்தப்பட்டதைத்தொடர்ந்து சங்கொலி பாடற்போட்டி நிகழ்வின் நடுவர்கள் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர்.

நடுவர்களாக சங்கீத கலாபூசணம் திரு. க சேயோன் அவர்களும், முத்த இசையமைப்பாளர் சுரத்தட்டு கலைஞர் விடுதலையின் வேர் திரு. தில்லைச்சிவம் அவர்களும், வயலின் வித்தகர் ஆசிரியர். கலாநிதி திரு. மகேஸ்வரன் அவர்களும் கடமையாற்றினர். அவர்களுக்கான புள்ளியிடும் படிவங்களை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் துணைப்பொறுப்பாளர் திரு. செல்வா அவர்கள் வழங்கியிருந்தார்.

பாலர்பிரிவு முதல் சிறப்புப்பிரிவான ஆறு பிரிவுகளிலும் 53 போட்டியாளர்கள் போட்டியிட்டிருந்தனர். சங்கொலி விருதுக்கான அதிஅதி மேற்பிரிவில் 5 பேர் போட்டியிட்டனர். கடும் போட்டிக்கு மத்தியில் செல்வி. சத்தியநாதன் சுபீட்சா 2025 சங்கொலி ( தாயக விடுதலைப்பாடல்) விருதினை தனதாக்கிக்கொண்டார்.

ஒவ்வொரு பாலர் முதல் ஒவ்வொரு பிரிவுப்போட்டியாளர்களும் தாயகப்பாடலை தமிழர் கலைபண்பாட்டுக்கலைஞர்களின் நேரடி இசையில் அற்புதமாகப் பாடியிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தாயகத்தின் உயிர்ப்பான உயர்வான உன்னதமான இந்தப்போட்டியில் புதிய புதிய பாடகர்கள் இணைந்து பாடியிருந்தனர். குறிப்பாக புதிய பாடல்களுக்கு சமமாக போராட்ட ஆரம்பகாலங்களில் போராட்ட உணர்வைத்தந்த பாடல்களான நித்திரையா தமிழா, சிட்டுக்குருவி மெட்டுப்போடு, காகங்களே காகங்களே, கடல்அலையே, ஆண்டாண்டு காலமதாய், பிஞ்சுவயதில் எங்கள் உள்ளம், ,புதிய வரலாறு எழுதும், தர்மம் ஒருநாள், பச்சைவயலே, தங்கமாலைக்கழுத்துகளே,மானம் ஒன்றே, தலைமகனே எங்கள் பிரபாகரனே என்ற பாடல்கள் எமது அடுத்த தலைமுறைக் குழந்தைகளை பெற்றோர்கள் ஆசிரியர்கள், தெரிவுசெய்து அழகாக அப்படியே பாடவைத்தமை மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

நிகழ்வில் சிறப்புரையை பரப்புரைப்பொறுப்பாளர் ஆற்றியிருந்தார். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளையும், அவர்களை செதுக்கிய ஆசிரியர்களையும், பலமாக இருந்து வரும் பெற்றோர்களை பாராட்டியிருந்தார். இவர்கள் எதிர்காலத்தில் எந்த உயர் நிலையில் வாழ்ந்திருந்தாலும் இவர்கள் எங்களின் தமிழீழ தேசத்தின் சொத்துக்கள் என்றதோடு இவர்களை தேசத்தின் பிள்ளைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய காலப்பொறுப்பு எல்லோருக்குமே உண்டு என்பதையும் எமக்கான விடுதலைப் போராட்டத்தின் எந்த வலியையும், அதன் வீரத்தையும், ஆர்ப்பணிப்பையும் எதையுமே தெரிந்துகொள்ளாத எங்கள் குழந்தைகள் அதனை அனுபவித்தவர்கள் போல் தமது பாடல்களால் எப்படி உணர்வையும் நம்பிக்கையையும் தந்து நின்றார்கள். அதனால்தான் இவர்கள் எமது தேசத்தின் சொத்துக்கள் என்றிருந்தார்..

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிரான்சு தேசத்தில் எமது தாயகவிடுதலைக்காக கலையாலும், வேறுவழிகளிலும் பலம்சேர்ப்பவர்களை “ விடுதலையின் வேர்கள் என்ற பட்டத்தை தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் வழங்கி மதிப்பளித்து வருகின்றனர். அந்த வகையில் 2025 ஆண்டு விடுதலையின் வேராக திரு. யஸ்ரின் தம்பிராஐh அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.

தாயகத்திலும் பிரான்சு மண்ணிலும் கலையால் எமது தேசத்தின் விடுதலைப்போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றிய அறிக்கையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் வாசித்தளிக்க அவருக்கான மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு. நிதர்சன், தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. திருமாறன் பொன்னாடைபோர்த்தி அவருக்கான மதிப்பளிப்புப் பட்டயம் மற்றும், அறிக்கையையும் வழங்கி வைத்தனர். மதிப்பளிக்கப்பட்ட யஸ்ரின் அவர்கள் தனது வாழ்க்கை பயணத்தில் தனது அறிவிப்பயணம் நடந்த நிகழ்வில் சங்கொலி பாடற்போட்டி நிகழ்வும் ஒன்று என்றும் தற்போதைய நிலையில் அந்த பழைய வீரியம் தற்போது தன்னிடம் இல்லாத போதும் அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2025 சங்கொலி விருதினை எங்கள் தலைவன் பிரபாகரன் என்ற பாடலை வழங்கி மக்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்ற செவ்வி. சத்தியநாதன் சுபீட்சா அவர்கள் தனதாக்கிக்கொண்டார். அவருக்கான விருதினை பரப்புரைப் பொறுப்பாளர், மற்றும் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. திருமாறன் மற்றும் சென்ற வருடம் 2024 விருதினை தனதாக்கிக் கொண்ட செல்வி. தி. லேயா ஆகியோர் வழங்கியிருந்தனர். நிகழ்வில் பங்கு பற்றிய இவரின் தயார் உரையாற்றும் போது இந்த விருதிற்காக தன்மகள் தொடர்ந்து நான்கு வயது முதல் போராடியிருக்கின்றார் என்றும் தன்னுடைய மற்றொரு மகள் சுவிசு நாட்டில் நடைபெற்ற தாயக விடுதலைப்பாடற்போட்டி வாகைக்குயில் நிகழ்வில் 2025 விருதினை பெற்றிருப்பதும் தனது மற்றொரு குழந்தை சிறுவர் பிரிவில் பாடிவருவதாகவும் பிள்ளைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் பெற்றோர்கள் எப்போதும் கொடுக்க வேண்டும் என்றார். அதேபோல வெற்றி பெற்ற சுபீட்சாவிடம் கேட்ட போது தான் பாடும் முயற்சியை எத்தனையோ கஸ்ரங்கள் வந்தபோது விட்டுவிடவில்லையென்றும் நான்கு வயது முதல் தொடர்ந்து பாடடிவருகின்றேன் ஆனால் எந்த வெற்றியையும் தான் பெறவில்லை என்றும் தொடர்ந்த எனது கலைப்பயணம் இன்று இந்த உயரிய விருதினை பெற வைத்திருக்கின்றது என்பதோடு எமது அடுத்த கலைத்தலைமுறை தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் பங்கு பற்றுவதே முக்கியமானது என்று கூறியியி என்றருந்தார்; ஒரு நாளைய தலைமுறை இவ்வாறு கூறியிருந்தமை பெரும் வரவேற்பை பங்கு கொண்ட மக்களின் கரகோசதிலிருந்து காணக்கூடியதாக இருந்தது. மாலை 7.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

2025 சங்கொலி தாயகவிடுதலைப்பாடற்போட்டியில் அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள் விபரம் பின் வருமாறு :-

பாலர் பரிவு : .1 ஆம் இடம்: உமாநாத் டிலான், 2ஆம் இடம்: உமாநாத் லெயா,
கீழ்ப்பிரிவு : 1 ஆம் இடம்: சத்தியநாதன். ரியா,
2 ஆம் இடம்: சின்னத்துரை தேர்வின்,
3 ஆம் இடம்: பத்மநாதன் அச்சயன்
மத்திய பிரிவு : 1 ஆம் இடம்: சிறிதரன் அகஷ்திகா,
2 ஆம் இடம்: . யேமன் சரோன்,
3 ஆம் இடம்: . தர்மலிங்கம் ஹரிதிஸ்
மேற்பிரிவு : 1 ஆம் இடம்: சிறிதரன் அக்சரா
2 ஆம் இடம்: சுரேஸ்குமார் தமிழினி
3 ஆம் இடம்: . விநாயகமூர்த்தி சர்சிகா
அதிமேற்பிரிவு : 1 ஆம் இடம்: சுதன் மாயா
2 ஆம் இடம்: பிரபாகரன் கரின்
3. ஆம் இடம்: புவனேந்திரன் எழிலருவி. அதிஅதி மேற்பிரிவு : 1 ஆம் இடம்: ஜெயகாந்தன் அஸ்வினி
2 ஆம் இடம்: .பத்மராஜா கோபிகா
3 ஆம் இடம்: . ஜெயராஜ் அகன்யாமேரி

சிறப்புப் பிரிவு : 1 ஆம் இடம்: உதயகுமார் அருண்
2 ஆம் இடம்: பொன்னு மரியா ஜெஸ்மின்
3 ஆம் இடம்: கென்றிஸ் சந்தனா

2025 சங்கொலி விருதினை செவ்வி. சத்தியநாதன் சுபீட்சா