பிரான்சில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ள தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மே 4 இல் புலன்மொழி வளத்தேர்வுடன் தொடங்கிய இத்தேர்வானது 01-06-2024 சனிக்கிழமை எழுத்துத் தேர்வுடன் நிறைவுற்றுள்ளது.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்பொதுத் தேர்விற்கான தேர்வு வினாத்தாள்களைத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வழங்கி வருகிறது.

இல்-து-பிரான்சில் 53 தமிழ்ச்சோலைகள் மற்றும் வெளிமாகாண முதன்மை நகர்களிலுள்ள 12 தமிழ்ச்சோலைகள் மற்றும் 5 தனியார் பள்ளிகள் என 5563 மாணவர்கள் இத்தேர்வுகளில் தோற்றியிருந்தனர்.

இல்-து-பிரான்சு தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வு அரச பொதுத் தேர்வு நடுவகமான MAISON DES EXAMANS இல் ARCUEIL நகரசபை மற்றும் பிரான்சு அரசின் அரச அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்றது. குறித்த இந்தத் தேர்வு நடுவகத்தில் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு 17 ஆவது தடவையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

5279 தேர்வர்கள் தோற்றிய இம்மண்டபத்திற்கான பாதுகாப்பு, ஒருங்கமைப்பு, உணவுப் பரிமாற்றம், ஒழுங்கமைப்பு என்பவற்றை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உப-கட்டமைப்புகளும் சிறப்பாகத் திட்டமிட்டு நடாத்தியிருந்தன.

பிரான்சில் உயர்கல்வித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக மீண்டும் கொண்டுவரக்கோரி, தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் தேர்வு மண்டப சுற்றுச் சூழலில் நின்றிருந்த பெற்றோர்களிடம் கையழுத்து வாங்கிக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2024 சிறப்புற நிறைவுறப் பங்காற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.