கடந்த 30.06.2025 அன்று பிரான்சு தேசத்தின் பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த ஊடகவியலாளர், அறிவிப்பாளர், பேச்சாளர், விடுதலைப்பற்றாளர் அமரர். வினோஜ்குமார் அவர்கள் சாவடைந்திருந்தார். அவரின் இறுதி , வணக்க நிகழ்வு 31.07.2025 வியாழக்கிழமை வில்தனுஸ் மயான மண்டபத்தில் நடைபெற்றது.
12.15 மணிக்கு பூதவுடல் உறவினர்களாலும், அதன் பின்னர் தமிழர் கலைபண்பாட்டுக்கழக உறுப்பினர்களாலும் தாங்கிவரப்பட்டது. அனைத்து மக்களாலும் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கண்ணீர் புகழ்வணக்க அறிக்கை வாசிக்கப்பட்டு இதுவரைகாலமும் அவர் ஆற்றிய தேசப்பணிக்கு மதிப்பளித்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ‘வீறுரைஞன்” என்று வினோஜ்குமார் மதிப்பளிக்கப்பட்டு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் கொடிபோற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடும்ப உறவுகள், பொதுமக்கள் கண்ணீருடன் மலர் வணக்கம் செய்திருந்தனர். கலையாலும், தேசப்பணியாலும், அறிவிப்புப் பணிகளிலும் பணியாற்றியவர்கள், அவர் அரசியல் பணியாற்றிய கட்டமைப்புக்கள், மனிதநேயப்பணியாற்றிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம், அவர் பணியாற்றிய கலைபண்பாட்டுக்கழகம், பாரிஸ்சுருதி இசைக்குழுவினர்கள், கலைஞர்கள் தமது இரங்கல் உரைகளை வழங்கியிருந்தனர். இவரின் இறுதி வழியனுப்பும் நிகழ்வுக்கு ( இன்று வேலைநாட்களாக இருந்த போதும்) பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவரையும், அவரின் தேசப்பணியையும் நேசித்த அனைவரின் அழுகைக்குரலுடன் புகழ்உடல் அக்கினியில் சங்கமமாகியது.
மாவீரர்நாள், மே 18, ஜெனீவாப்பேரணி, போட்டி நிகழ்வுகளில் ரிரிஎன் நிகழ்வு போன்றவற்றில் தனது காந்தக்குரலால் மக்களைக்கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டதொரு குரல்ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.
ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இறுதியில் அவர் சொல்லும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரம் உச்சரிக்கும் ஒலி உள்வாங்கியவர்களின காதுகளில் தொடர்ந்து ஒலித்து நிற்கும் அளவிற்கு இருந்திருக்கின்றது.
சாதிப்பதற்கு வயதிருந்தும் இளவயதில் எம்மை விட்டு பிரிந்துவிட்ட வீறுரைஞன் வினோஜ்குமார் அவர்களின் பணி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அதன் அனைத்துக்கட்டமைப்புகளின் வரலாற்றில் பதிவு பெறும் என்ற பதிவையே இவரின் உயிர்ப்பிரிவு பதிவுசெய்கின்றது.