2022 ஆம் ஆண்டை போன்ற பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும் நாட்டில் ஏற்படாது என்று உத்தரவாதம் அளிக்கிறேன். பூகோள எதிர்மறையான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கம் எதிர்வரும் காலப்பகுதிகளில் 7 சதவீதமாக அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. எதிர்வரும் மூன்று மாதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்விகளை சமப்படுத்தி பணவீக்கத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய கிழக்கு மோதல் நிலை ஆரம்பமான சந்தர்ப்பத்தில் அந்த மோதல் நிலை குறுகிய காலத்தில் நிறைவடையும் என்று அப்போதைய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்க்கப்பட்டது.

2 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் 4 சதவீதமளவில் அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டது.

மத்திய கிழக்கின் மோதல் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள பின்னணியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான செலவுகள் உயர்வடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் ஒரு மாதத்துக்குள் பணவீக்கம் 5.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் ஏற்றுமதி செலவு 2 பில்லியன் டொலராக காணப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மட்டத்திலும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் நுகர்வை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்து கோட்டா முறைமையை கடுமையாக அமுல்படுத்த தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலப்பகுதிகளில் பணவீக்கம் 7 சதவீதமளவில் உயர்வடைவதற்கு சாத்தியம் காணப்படுகிறது. எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிகளில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்விகளை சமப்படுத்தி பணவீக்கத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாணய கொள்கையும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டின் நிலைமைதான் 2026ஆம் ஆண்டும் காணப்படுகிறது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. ஏனெனில், 2022ஆம் ஆண்டு உள்ளக மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களினால்தான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. அவ்வாறான தன்மை தற்போது கிடையாது.

பூகோள போர்ச்சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால்தான் தற்போதைய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சிறந்த முறையில் எம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும். வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது. ரூபா மற்றும் டொலரின் கையிருப்பு ஸ்திரமாக உள்ளது.

பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது. ஆகவே 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நாட்டில் இனி ஒருபோதும் ஏற்படாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் என்ற அடிப்படையில் நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார்.