இங்கிலாந்து நாட்டின் உடற்கட்டுப் போட்டியாளர் மத்தேயுஸ் சிமுரா (Mateusz Chmura), ஒரு பிரபல போட்டி மேடையில் போட்டியாளராக நின்று, பார்வையாளர்கள் முன்னிலையில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 

தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்னதாக இவர் மறைந்த செய்தி, இவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இங்கிலாந்தின் டெல்ஃபோர்ட்டில் பிசிகல் கல்ச்சர் அசோசியேஷன் ஏற்பாட்டில் பிரிட்டிஷ் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அவர் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மேடையில் விழுந்தவருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதையடுத்து, அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டதாகவும் மருத்துவமனையிலிருந்து அவரது மறைவு செய்தி வெளியாவதற்கு முன்னரே, விளையாட்டு வீரர்களுடன் கலந்தாலோசித்து, போட்டியை மீண்டும் தொடங்க தீர்மானித்திருந்ததாகவும் போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்திருந்தது. 

மத்தேயுஸின் மறைவுக்கு இங்கிலாந்தின் உடற்கல்வி சங்கம் அதன் இரங்கல் செய்தியினை சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தது.

மத்தேயுஸின் இறப்புக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.