காலி - அம்பலாங்கொடையில் வளவை கங்கை பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை கார் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடமாற்றம் காரணமாக எம்பிலிப்பிட்டிய நோக்கிப் புறப்பட தயாராக இருந்த போது குறித்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று அதிகாலை போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த போது அம்பலாங்கொடை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கார் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளார்.

இதன்போது காரின் சாரதி பொலிஸ் கான்ஸ்டபிளை மோதிவிட்டு பொலிஸ் உத்தரவை மீறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தப்பிச் சென்ற கார் சாரதியும் பின்புறத்தில் பயணித்தவரும் அம்பலாங்கொடையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காரில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.