இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் வட மாகாணத்தின் மக்கள் சனத்தொகை விபரம் குறைத்துக் கணக்கிடப்பட்டமை வெறும் அச்சிடல் பிழை போல் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும், அத்தவறை இணையத்தில் வெளியிட்ட நிகழ்நிலை அறிக்கையில் திருத்துவதுடன் மாத்திரம் நிறுத்திவிடமுடியாது. மாறாக மத்திய வங்கி பொது அறிவிப்பொன்றை விடுத்து, ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட அறிக்கைகளிலும் அந்தத் தவறை உடனடியாகத் திருத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தரவுப்பிழை அச்சிடல் தவறால் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டு, மத்திய வங்கியினால் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட நிகழ்நிலை அறிக்கையில் அத்தரவு திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அறிக்கையின் அச்சிடப்பட்ட பிரதிகள் ஏற்கனவே பல்வேறு தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது. அச்சிடப்பட்ட அறிக்கை என்பது ஓர் எழுத்துமூல ஆவணமாகும்.
இந்தத் தவறு வெறும் அச்சிடல் பிழை போல் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் அதனைக் காரணமாகக்கூறி இதனை விட்டுவிடமுடியாது. மாறாக மத்திய வங்கி இந்தத் தவறு குறித்து ஒரு பொது அறிவிப்பை விடுத்து, அச்சிடப்பட்ட அறிக்கைகளிலும் உரிய திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும்' என சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான சமூக - பொருளாதாரத் தரவு அறிக்கையில் 'நாட்டின் விபரம் - 2025' எனும் தலைப்பின்கீழ் உள்வாங்கப்பட்டிருந்த தரவுகளில் இலங்கையின் மொத்த சனத்தொகை 21.756 மில்லியன் எனவும், வடக்கு மாகாணத்தின் சனத்தொகை 557,000 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை அந்தத் தரவு அட்டவணையில் மேல் மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணம் என்பவற்றின் மக்கள் சனத்தொகை முறையே 6.115 மில்லியன், 2.770 மில்லியன், 2.675 மில்லியன், 1.765மில்லியன், 2.551 மில்லியன், 1.386 மில்லியன், 1.404 மில்லியன் மற்றும் 2.069 மில்லியன்களாக உள்வாங்கப்பட்டுள்ளன.
இத்தரவுகளை மேற்கோள்காட்டிக் கருத்துரைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வறிக்கையில் வட மாகாணத்தின் சனத்தொகை எனக் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை தவறானது என்றும், உண்மையான எண்ணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட இரு மடங்கு உயர்வானதாகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதனையடுத்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் பிரகாரம் வட மாகாண மக்கள் சனத்தொகை 1,150,148 ஆகக் காணப்பட்டதாகத் தெரிவித்த சர்வதேச நெருக்கடிக் கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், மத்திய வங்கியின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள தரவுகளின் துல்லியத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியினால் இணையத்தில் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான சமூக - பொருளாதாரத் தரவு அறிக்கையில் 557,000 எனக் குறிப்பிடப்பட்டிருந்த வடக்கு மாகாண மக்கள் சனத்தொகை, தற்போது 1,181,000 ஆகத் திருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த அறிக்கையின் பல பிரதிகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள நிலையில், 'வடக்கு மாகாண மக்கள் சனத்தொகை தொடர்பான தரவுப்பிழை அச்சிடல் தவறால் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டு, மத்திய வங்கியினால் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட நிகழ்நிலை அறிக்கையில் அத்தரவு திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அறிக்கையின் அச்சிடப்பட்ட பிரதிகள் ஏற்கனவே பல்வேறு தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது. அச்சிடப்பட்ட அறிக்கை என்பது ஓர் எழுத்துமூல ஆவணமாகும். இந்தத் தவறு வெறும் அச்சிடல் பிழை போல் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் அதனைக் காரணமாகக்கூறி இதனை விட்டுவிடமுடியாது. மாறாக மத்திய வங்கி இந்தத் தவறு குறித்து ஒரு பொது அறிவிப்பை விடுத்து, அச்சிடப்பட்ட அறிக்கைகளிலும் உரிய திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும்' என சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.