எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலையில் அரசாங்கம் மானியம் வழங்கத் தீர்மானித்தால், அந்த மானியத்தை வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கும் வழங்காமல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மாத்திரம் வழங்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை(02)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலை தொடர்பான தற்போதைய நிலைமைக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உடன்படிக்கைக்கும் தொடர்பு உள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது உள்நாட்டிலும் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் வழங்கப்படும் மானியத்துக்கான செலவை யார் ஏற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

முன்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே எரிபொருளை விற்பனை செய்தது. பின்னர் அது பல நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் சினோபெக் நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இந்த முறை வெற்றிகரமாக அமைந்துள்ளதா என்பது தொடர்பிலும் கேள்வி உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து தங்களது விலையில் விற்பனை செய்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் அரசாங்கம் மானியம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த மானியத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டுமா என்பதே கேள்வியாகும். அரசாங்கம் மானியம் வழங்க வேண்டுமென கருதினால், அதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

குறிப்பிட்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தால், அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கி, அந்த நிதியை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மாத்திரம் வழங்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை நான் அன்றும் கொண்டிருந்தேன், இன்றும் கொண்டிருக்கிறேன், எதிர்காலத்திலும் கொண்டிருப்பேன்.

தற்போது மானியம் வழங்கப்படுவதுடன் அதன் ஒரு பகுதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தின் நிதி சென்றடைகிறது.

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த காலத்திலிருந்து வந்த கடன்களை செலுத்துவதற்காக ஒரு லீற்றர் எரிபொருளுக்கு சுமார் 50 ரூபாய் செலுத்துகிறது. கடந்த காலக் கடன்கள் மீண்டும் உருவாகாத வகையில் விலைச் சூத்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் எரிபொருள் மானியம் உண்மையில் தேவையுள்ள மக்களைச் சென்றடைகிறதா என்பதும் கேள்வியாகும். அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் துறைகளும் அதன் பயனைப் பெறுகின்றன.

இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது எரிபொருள் விலையை குறைக்க முடியும் என்றும், முன்னைய அரசாங்கங்கள் தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தியதாகவும் கூறியது. தற்போது அந்த நிலைப்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியின் செயற்பாடு வெறுமனே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்வதாக இருக்கக்கூடாது. எரிபொருள் விலை ஏன் அதிகரித்தது, மானியம் யாருக்கு வழங்கப்பட வேண்டும், அரசாங்கத்தின் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அன்றைய மாற்றத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் ஏன் ஏற்படவில்லை என்பதையும் கேள்வி எழுப்ப வேண்டும். மானியம் வழங்கப்பட்டால் அது மக்களுக்கு நிவாரணமாக அமைய வேண்டும்; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதன் பயன் சென்றடையக்கூடாது.

அரசாங்கம் மானியம் வழங்கும் கொள்கையை தொடர்வதாக இருந்தால், அதன் நோக்கம் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இலக்காக இருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே விதமாக நிதிச் சலுகை வழங்குவது அரசாங்கத்தின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தும் நடவடிக்கையாக அமையாது. எனவே, மானியத்தின் பயனாளிகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து வெளிப்படையான முடிவு அவசியமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் தெளிவான கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.