மருத்துவ பீட மாணவர் செயற்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஒரு சில கோரிக்கைகளை  முன்னிறுத்தி  திங்கட்கிழமை (18) கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்க மருத்துவ பீட மாணவர் செயற்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், பதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, அச்சங்கத்தின்  மாணவர் பிரதிநிதிகளை நேற்று  பிற்பகல் அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில், பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மருத்துவ மாணவர்களை இடைநிலை பயிற்சிகளுக்காக இணைத்துக்கொள்ளுதல், புதிய நியமனங்களை வழங்குதல் மற்றும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்விடயங்கள் குறித்து அதிகாரிகளுடன் இணைந்து விரிவாக ஆராய்ந்த அமைச்சர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாட இணக்கம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர்களான ஜி.எம். ஜனக கித்சிறி, விசேட வைத்திய நிபுணர் குமார விக்ரமசிங்க மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.