முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவினம் 2024 ஆம் ஆண்டில் 110.51 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட நிலையில், அந்த தொகை 2026 ஆம் ஆண்டில் 4.39 மில்லியன் ரூபாவாகக் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) சனிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

2024 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே அதிகபட்சமாக 61.66 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 13.69 மில்லியன் ரூபா,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 18.57 மில்லியன் ரூபா,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 11.02 மில்லியன் ரூபா,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2.53 மில்லியன் ரூபா என்ற அடிப்படைமயில் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாசவுக்காக மேலதிகமாக 3.04 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்துச் செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதிவரை முன்னதள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான செலவினம் தலா 880,000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.2026 ஆம் ஆண்டில் ஹேமா பிரேமதாசவுக்காக எவ்வித செலவினமும் பதிவாகவில்லை.

இதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் 110.51 மில்லியன் ரூபாவாக இருந்த செலவினத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கான மொத்தச் செலவினம் 4.39 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகிறது என்றார்.