வேலணை குறிகாட்டுவான் இறங்குதுறையை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் வாகன தரிப்பிடம் தொடர்பில், சபையின் வருமானத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பாதிக்கப்படாத வகையிலும் ஆரோக்கியமான, முறையான பொறிமுறையொன்றை வேலணை பிரதேச சபை உருவாக்க வேண்டும் என சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (22) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த விடையம் குறித்து முன்மொழிவை சபையில் முன்வைத்து உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

குறிகாட்டுவான் பகுதியில் வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணி இல்லாத நிலையில், தனியார் ஒருவருக்கு வருடாந்த ஒப்பந்த அடிப்படையில் குறித்த வாகன தரிப்பிடத்தை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு, அதன் ஊடாக வாகன தரிப்பிடச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சபையினால் அனுமதிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக ஒப்பந்ததாரர் குறித்த சேவையை முன்னெடுத்து வருகின்றபோதிலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தரப்பிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அதிகளவிலான வாகனங்கள் வந்து செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாத்திரமன்றி, பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் வெளியேறும் வாகனங்களிடமிருந்தும் கட்டணம் அறவிடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், நடைமுறையில் உள்ள குறைபாடுகள் ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தெளிவான நடைமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சபையின் தவிசாளர், அடுத்த வருடம் முதல் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டு, எவரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.