நாட்டில் விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்களைத் திருத்துவதற்கு உட்பட்டு, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (20) பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுவின் கூட்டத்தில், குறித்த சட்டமூலத்தின் ஏற்பாடுகள் மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நாய்களுக்கு விசர்நாய்க்கடி தடுப்பூசி வழங்குதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வதை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் ஊடாக இலங்கையில் விசர்நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும். தேசிய விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு அறிவுரைக் குழுவையும் பிராந்திய விசர்நாய்க்கடிநோய் ஒழிப்பு அறிவுரைக் குழுக்களையும் தாபிப்பதற்காகவும், (476 ஆம் அத்தியாயமான) விசர்நாய்க்கடிநோய்க் கட்டளைச் சட்டத்தையும் (477 ஆம் அத்தியாயமான) நாய்களைப் பதிவுசெய்தல் கட்டளைச் சட்டத்தையும் நீக்குவதற்கும், அத்துடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வது இச்சட்டமூலத்தின் நோக்கங்களாகும்.
சட்டமூலம் தொடர்பான கலந்தாலோசனையின்போது, நாய்களுக்கு விசர்நாய்க்கடி தடுப்பூசி வழங்குவதற்கான வயது எல்லை தொடர்பில் காணப்படும் முரண்பாடுகளை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நாய்களுக்கு முதலாவது விசர்நாய்க்கடி தடுப்பூசியை வழங்க வேண்டிய வயது தொடர்பான ஏற்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிடுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தெருநாய்களுக்கு தன்னார்வ அடிப்படையில் உணவு வழங்குதல், அவற்றுக்குப் பாதுகாப்பளித்தல் அல்லது சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுக்க உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் சட்டபூர்வமான நிலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான நபர்கள் தன்னார்வ அடிப்படையில் நாய்களுக்கு உதவுகின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை அந்நாய்களின் சட்டபூர்வ உரிமையாளர்களாகக் கருதுவதையோ அல்லது நாய் உரிமையாளர்களுக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் அவர்கள் மீது சுமத்துவதையோ தவிர்ப்பதற்காக, உரிய சட்ட ஏற்பாடுகளைத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
நாயகளுக்கான கருத்தடை நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், அவற்றைச் சரியான முறையில் கால்நடை மருத்துவ மேற்பார்வையின் கீழ் சத்திரசிகிச்சை மூலம் மேற்கொள்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட மாற்று முறைகள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, விலங்கு நலனை உறுதிப்படுத்தும் வகையில் உரிய சட்ட ஏற்பாடுகளைத் தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நாய்களைப் பதிவு செய்யும் நடைமுறையை முறைப்படுத்துதல் மற்றும் அவ்வாறு பதிவு செய்வதற்கான பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுவோருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகைகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. வணிக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்யும் நிலையங்களின் ஒழுங்குமுறையை வலுப்படுத்துதல், அந்நிலையங்களின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துதல் மற்றும் விலங்குகள் மீதான துன்புறுத்தல்களைத் தடுப்பதற்காக உரிய அபராதங்கள் மற்றும் தண்டனைகளைத் திருத்துதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
விசர்நாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நாய்களைக் கண்காணிக்கும் போது, முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் கால்நடை மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
விசர்நாய்க்கடி நோயை ஒழிப்பதற்கான தேசிய மற்றும் பிராந்திய அறிவுரைக் குழுக்களை உருவாக்கும்போது, அவற்றின் அமைப்பு, பொறுப்புகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவத்தையும், சம்பந்தப்பட்ட நிபுணத்துவ நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, சந்தன சூரியஆரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, மருத்துவர் செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




